மறுநாள் காலை இந்தப் பகுதிகளுக்கு பேரூந்துகளுடன் சென்ற படையினர் ஆண்கள் பெண்கள் என பொதுமக்களைப் பலவந்தமாக பேரூந்துகளில் ஜெயபுரத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளனர். ஜெயபுரம் இராணுவ முகாமில் சனல் 4க்கு எதிராக ஏற்கனவே தயாராக எழுதி வைக்கப்பட்டிருந்த பதாதைகள், சுலோக அட்டைகளை இவர்களது கையில் கொடுத்து எதிர்ப்பு ஊர்வலம் நடத்துமாறு அச்சுறுத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும், பொலிசாரும் சூழ்ந்து நிற்க, சுலோக அட்டைகளையும் பெரிய சிங்கக் கொடிகளையும் ஏந்திய மக்களினால் சுமார் 300 மீற்றர் தொலைவுக்கு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.
முன்கூட்டியே அங்கு அழைத்து வரப்பட்டிருந்த செய்தியாளர்கள், இந்த எதிர்ப்பு ஊர்வலத்தை படங்கள் எடுத்ததுடன், வீடியோவும் எடுத்துள்ளனர். தாங்கள் ஏமாற்றப்பட்டு அச்சுறுத்தப்பட்டே, ஊர்வலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் தமது சுயவிருப்பத்திற்கு மாறாகவே தாங்கள் கலந்து கொள்ள நேர்ந்ததாக ஊர்வலத்திற்குப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட பலரும் தெரிவித்துள்ளனர். போர்க்குற்றச்சாட்டுகளால் விழி பிதுங்கி நிற்கும் அரசாங்கத்தையும், இராணுவத்தினரையும் இத்தகைய கபடமான ஏமாற்று நாடகங்களின் மூலம் காப்பாற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய வன்னியில் உள்ள இராணுவ அதிகாரிகள் முழு மூச்சாக இறங்கியிருப்பதாக வன்னியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றார்கள்.
0 comments:
Post a Comment