Tuesday, October 5, 2010

சிறையின் சீமெந்துத் தரையில் இரவுகளைக் கழிக்கும் சிறிலங்கா போரின் கதாநாயகன் பொன்சேகா

0 comments
ஒரு காலம் விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் படையினரை வழிநடாத்திய சிறிலங்கா போரின் கதாநாயகன் பொன்சேகா, தனக்கு அளவில்லாத கைதி உடையுடன் சிறையில் சீமெந்துத் தரையில் பாயில் படுத்து உறங்குகிறார்.
இந்தத் தீர்ப்புத் தொடர்பாக அதிபர் மகிந்த ராஜபக்ச தனது அங்கீகாரத்தை வழங்கியதைத் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பொன்சேகா வியாழனன்று வழமையான சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகையை ஆதாரம் காட்டி ’டெக்கன் கரால்ட்’ [Deccan Herald] என்ற இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"தற்போது கைதி இல - 0/22032 உடைய பொன்சேகா, தனது தேசிய உடையிலிருந்து வழமையான சிறைக் கைதிகளுக்குரிய உடைக்கு மாறி, சீமெந்துத் தரையில் பாயில் படுத்துறங்கினார். அவருக்கு ஒரு தலையணை மட்டும் வழங்கப்பட்டது" என சண்டே ரைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.
59 வயதுடைய இந்த போர் கதாநாயகன் இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை அதிபர் ராஜபக்ச உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, கடற்படையத் தலைமையகத்திலிருந்து வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
செப்ரெம்பர் 17 அன்று இரண்டாவது நீதிமன்ற அமர்வு இடம்பெற்றபோது, எதிர்க்கட்சியான சனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா, ஆயுதக் கொள்வனவின்போது கேள்வி அறிவித்தல் நடைமுறைகளை மீறியிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 3 வருடம்வரை சிறைத்தண்டனை விதிக்கலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இராணுவ நீதிமன்றம் 3 வருடம் சிறைத்தண்டனையை பொன்சேகாவிற்கு விதித்திருந்தபோதும், சிறிலங்கா அதிபர் அதனை 30 மாதங்களாகக் குறைத்துள்ளார்.
”அதி உயர் பாதுகாப்பு நிறைந்த வெலிக்கட சிறையின் எஸ் பிரிவிற்கு சரத் பொன்சேகா மாற்றப்பட்டபோது வியாழக்கிழமை நள்ளிரவாகியிருந்தது” என சண்டே ரைம்ஸ் தெரிவிக்கிறது.
வெள்ளியன்று காலை 5 மணிக்கு ஏனைய தனது சகாக்களைப்போலவே எழுந்த பொன்சேகா அவரது அறையில் ஒரு கழிப்பறை இருந்தபோதும் அதன் நீர்ப் பம்பி வேலைசெய்யவில்லை என முறையிட்டார். ”அவர் தண்ணீருக்காக கட்டடத்திற்கு வெளியே செல்லவேண்டியிருந்தது. அங்கு கழுவுவதற்கு அல்லது குளிப்பதற்கு அவர் வாளியில் நீரை எடுக்கவேண்டும்.
பின்னர் காலை உணவைப் பெறுவதற்காக ஏனையவர்களுடன் அவரும் வெள்ளித் தட்டுடனும் மறுகையில் குவளையுடனும் காத்து நின்றார்.
”சோறும் சம்பலுமே காலை உணவு. சிறையின் வழமையான நடவடிக்கையாக ஒரு வைத்தியர் அவரைப் பரிசோதித்துள்ளார். தையல்காரர் அவருக்கு சரியான அளவில் உடையை வழங்குவதற்காக அளவெடுத்தனர்” என அப்பத்திரிகை தெரிவிக்கிறது.
”வெள்ளியன்று மதிய உணவுக்கு மீண்டும் வரிசையில் வந்துநின்றார். சோறு, நீர்ப் பூசணிக்காய், பருப்பு மற்றும் சிறிய மீன்துண்டுடன் சிறிதளவு குழம்பு ஆகியன வழங்கப்பட்டது. இதன் பின் உடனடியாக அவர் தனது அறைக்குத் திரும்பிவிட்டார்.

0 comments: