Thursday, June 2, 2011

ராஜீவ்காந்தி கொலைத்திட்டம்: லண்டனில் நடந்தது!

0 comments


இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ராஜீவ் கொலை வழக்கின் மர்மங்கள் விலகாது போலும்! ராஜீவ் சர்மா என்பவர் எழுதிய 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி - காலடிச் சுவடுகள்� என்ற புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகி பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியது.

அதை ஆனந்தராஜ் என்பவர் தமிழ்ப்படுத்தி உள்ளார்.

''ராஜீவ் காந்தி படுகொலை என்பது நம்புவதற்கு அப்பாற்பட்ட ஒரு கொடூரம் என்பது வெளிப்படை. இதில் புலிகள் வெறும் கைகள் மட்டுமே. தனுவும் சிவராஜனும் அதில் வெறும் விரல்களே. இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள மூளை இதுவரை மறைந்தே உள்ளது.

ராஜீவ் படுகொலை, இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கவும் வலுவிழக்கச் செய்யவுமான சர்வதேசச் சதி என்ற சக்கரத்தின் இன்னொரு கம்பியாகும்!'' என்ற பீடிகையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் ஒரு வாக்குமூலத்தைப் படிக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.

ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு, ஷாஹீத் பெருமன் சிரோமணி அகாலிதள் அமைப்பின் தலைவரான மகந்த் சேவா தாஸ் சிங் அளித்த வாக்குமூலம்தான் அது. அதை மட்டும் அப்படியே தருகிறோம்!

மகந்த் சேவா தாஸ் சிங் சொல்கிறார்...

நான் டிசம்பர் 26, 1990 அன்று லண்டன் சென்றேன். அடுத்த நாள் நான் அவர் (ஜக்ஜித் சிங் சௌகான்) வீடு இருந்த 64, வெஸ்டர்ன் கோர்ட், மத்திய லண்டன் முகவரிக்குச் சென்றேன்.

அங்கு காலிஸ்தானின் அலுவலகமும் இருந்தது. லண்டன் செல்வதற்கு முன்னதாக நான், பிரதம மந்திரி சந்திரசேகரைச் சந்தித்தேன். நான் லண்டனுக்குப் புறப்படுவதாக சந்திரசேகரிடம் தெரிவித்தேன்.

அவர், என்னிடம் என் நண்பரான ஜக்ஜித் சிங் சௌகானிடம் பேசுமாறு கூறினார். 'பஞ்சாபில் வன்முறையை நிறுத்திவிட்டு, பஞ்சாப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்� என்று சௌகானிடம் கூறுமாறு என்னிடம் தெரிவித்தார்.

நான் லண்டனில் உள்ள சௌகானின்அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றேன். இருவரும் தேநீர் அருந்தினோம். அந்த இடத்தில் ஏற்கெனவே 10 அல்லது 12 நபர்கள் இருந்தனர்.

சௌகான் என்னை கீழ்த்தளத்தில் இருந்த காலிஸ்தான் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு தொலைத் தொடர்புக்குத் தேவையான அனைத்துக் கருவிகளும் பொருத்தப்பட்டு இருந்தன.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் தொலைத் தொடர்புகொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகளின் செயல்பாட்டினை அவர் விளக்கினார். சௌகானிடம், மேல்தளத்தில் கூடி இருக்கும் நபர்கள் யார் எனக் கேட்டேன்.

அவர்கள் பப்பர்கல்சா, காலிஸ்தான் கமண்டோ படை மற்றும் எல்.டி.டி.ஈ-யைச் சேர்ந்தவர்கள் எனக் கூறினார். அதில் எல்.டி.டி.ஈ-யின் ஆர்.எம்.பிரதியும் இருந்தார். நான் பிற நபர்களின் பெயர்களைக் கேட்கவில்லை.

நான் சௌகானிடம், 'எப்படி சந்திரசேகர்ஜி ஐந்து வருடங்களுக்குப் பிரதம மந்திரியாக நீடிப்பார்?� எனக் கேட்டேன். அதற்கு சௌகான், 'சந்திரசேகர், ராஜீவ் காந்தியை அழிப்பார்� என என்னிடம் கூறினார்.

'ராஜீவ் அழிவுக்குப் பிறகு காங்கிரஸில் முக்கியமான தலைவர்கள் யாரும் இல்லை. அதற்குப் பின்னர், காங்கிரஸ், சந்திரசேகரைப் பிரதமராக ஏற்றுக்கொள்ளும். எனவே சந்திரசேகர் ஐந்து வருடங்கள் பதவியில் இருப்பார்� என்றார்.

நான் சௌகானிடம் ராஜீவ் எவ்விதம் அழிக்கப்படுவார் எனக் கேட்டேன்... 'சீக்கியர்கள் மட்டும் அல்ல... தன்னுடன் வேறு தீவிரவாதக் குழுக்களும் இருக்கிறார்கள். ஹரியானா ஆட்கள் மற்றும் பிறர் இந்த வேலைக்குத் தயாராக இருக்கலாம்� என்றார்.

அப்பொழுது இடைமறித்த சர்தார் பர்வீந்தர் சிங் வர்மா, 'மகந்த்ஜி, ராஜீவ்ஜி து கயா� (ராஜீவ்ஜி போய்விட்டார்) எனக் கூறினார். நான் அந்தத் திட்டத்தை அறிய விரும்பினேன். ஆனால் அவர்கள், 'அதைக் கேட்கக் கூடாது� எனக் கூறினர்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நபரும் இடைமறித்து, 'ராஜீவ் அழிக்கப்படுவார்� என்பதை நான் சந்திரசேகரிடம் கூற வேண்டும் எனத் தெரிவித்தார்.

சௌகான் என்னிடம், 'புது தில்லி பாராளுமன்ற வளாகத்தில் ராஜீவைக் கொல்வதற்கான திட்டம் அவர்களிடம் இருந்தது� எனக் கூறினார். நான் அவரிடம், 'இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, சீக்கியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்களே? புது தில்லியில் வைத்து ராஜீவ் கொலை செய்யப்பட்டால், இந்தியாவில் உள்ள மூன்று கோடி சீக்கியர்களும் கொல்லப்படுவார்கள். ஒரு சீக்கியர்கூட உயிருடன் தப்ப முடியாது� என்று சொன்னேன். 'நாங்கள் ஏற்கெனவே அதைப்போன்ற ஒரு தாக்குதலுக்குத் திட்ட மிட்டுவிட்டதால், அந்தப் பாதையில் இருந்து விலக மாட்டேன்� என்று அவர் சொன்னார்.

நான் சௌகானை கீழ்த் தளத்துக்கு அழைத்துச் சென்று அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்யும் விதமாக அவர் மனதை மாற்றினேன். 'ராஜீவ் டெல்லியில் வைத்து கொல்லப்படாமல் இருப்பதை தான் பார்த்துக்கொள்வதோடு, வேறு ஏதேனும் ஓர் இடத்தில் கொலையை நிகழ்த்தும்படி பார்த்துக் கொள்வேன்� என்று அவர் கூறினார்.

'எனக்கு சந்திராசாமியிடம் தொடர்பு உள்ளது� என்றார். சந்திராசாமியிடம் போதுமான அளவு பணமும் திட்டங்களும் உள்ளது. அவரிடமும் இதைப்பற்றிக் கேட்டபோது, தாங்கள் டெல்லியில் வைத்து ராஜீவ்காந்தியைக் கொல்லப் போவது இல்லையென முடிவு செய்து இருப்பதாகத் தெரிவித்தார்.

நான் லண்டனில் இருந்து 1991 ஜனவரி 2 அன்று திரும்பினேன்... சௌகான் என்னிடம் மூன்று கடிதங்கள் கொடுத்தார். அதில் ஒன்று சந்திர சேகருக்கு... நான் அங்கிருந்து கிளம்பும்போது, இந்தியத் தலைவர்களான சரத்பவார், ஓம்பிரகாஷ் சவுதாலா, சந்திராசாமி மற்றும் இண்டியன் எக்ஸ்பிரஸ் கோயங்காவுடன், சர்தார் பல்வீந்தர் சிங் வர்மா ஆகியோர் தன்னை வந்து சந்தித்ததாக சௌகான் என்னிடம் தெரிவித்தார்.

ஒரு சந்திப்பு பம்பாயில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் உள்ள எக்ஸ்பிரஸ் டவரில் நடந்தது. அந்தக் கூட்டம் 'காலிஸ்தான் இயக்கத்தை மீண்டும் அமைப்பது மற்றும் ராஜீவ்காந்தியை அழிப்பது� ஆகிய விஷயங்கள் சம்பந்தப்பட்டது.

லண்டனில் பேசப்பட்ட விஷயங்களை நான் ராஜீவ் காந்தியிடம் (பிப்ரவரி 10, 1991 அன்று பாராளுமன்ற இல்லத்தில் வைத்து) விளக்கினேன். இந்த விஷயங்களை சந்திரசேகரிடமும் தெரிவித்துவிட்டதாகக் கூறினேன்.

சிறிது அதிர்ச்சியடைந்த ராஜீவ் காந்திக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. அவர் கோபமடைந்தது நன்றாகத் தெரிந்தது. நான் ராஜீவை மீண்டும் 1991, பிப்ரவரி 14 அல்லது 15-ல் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அவருடைய இல்லத்தை வேவு பார்த்ததாக, இரண்டு ஹரியானா காவலர்கள் பிடிபட்டனர். ராஜீவே இதை என்னிடம் கூறினார்.

இதே அளவு ஆபத்தான விஷயத்தை நான் அவரிடம் தெரிவித்ததாகவும் ராஜீவ் கூறினார். சௌகானுக்கு சந்திராசாமி மற்றும் சரத்பவார் பணம் அளித்து இருந்தனர்... ராஜீவ்ஜியின் கொலைக்குப் பின்னால் சந்திராசாமி உள்ளார்!'' என்று விலாவாரியாக விவரிக்கிறது அந்த வாக்குமூலம்.

எஸ்.ஐ.டி. விசாரணைக்கு நேர்மாறான விஷயங்களாக இருக்கின்றன ஜெயின் கமிஷன் வாக்குமூலங்கள். தமிழகத்திலும் இவை பலத்த சர்ச்சையைக் கிளப்பலாம்!
நன்றி ஜூனியர் விகடன்

0 comments: