Saturday, February 26, 2011

வன்னிப் பகுதிக்கு ஆசிரியர்கள் செல்வதற்கு நடத்தப்பட்ட இலவச போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

0 comments
வன்னிப் பகுதிக்கு ஆசிரியர்கள் செல்வதற்கு நடத்தப்பட்ட இலவச போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து கிளிநொச்சி, மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு கற்பிக்க செல்லும் ஆசிரியர்களின் நலன் கருதி நடத்தப்பட்ட இலவச போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இடம்பெயர்க்கப்பட்டு, மீள குடியமர்ந்த மாணவர்களுக்கு கற்பிக்கச் செல்லும் ஆசிரியர்கள் இதனால் பெரும்சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள்.

இலங்கை போக்குவரத்து சபையினால் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடத்தப்பட்டு வந்த இலவச போக்குவரத்து சேவை, நிதி இல்லாமையால் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்தது.

ஆசிரியர்கள் பொருமளவு பணத்தை கொடுத்து தினமும் தனியார் பேரூந்துகளில் பயணம் செய்ய முடியாதெனவும், அப்படி இல்லையென்றால், கஷ்ட பிரதேசங்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்க வேண்டுமெனவும் தேசிய ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்ராலின் வலியுறுத்தினார்.

இலவச போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்பட்டதால் ஆசரியர்கள் பலர் பாடசாலைகளுக்கு செல்வதில்லையெனவும், இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாகவும், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் அக்கறையுள்ள தொண்டு நிறுவனங்கள் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காணவேண்டுமெனவும் ஜோசப் ஸ்ராலின் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னரைப் போன்று சாதாரண போக்குவரத்து கட்டணத்துடன் வன்னி பிரதேசங்களுக்கான போக்குவரத்து சேவையை நடத்தினால் வெளி மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியுமெனவும், அதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு எடுக்க வேண்டுமெனவும் கிளிநொச்சி கல்வி வலய அதிகாரிகள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள கல்வி அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி ரூபசிங்கவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறான ஏற்பாடுகளை செய்வது கல்வி அமைச்சின் கடமையல்லவென அவர் பதிலளித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

0 comments: