Saturday, February 26, 2011

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளுக்காக நடந்த இரங்கல் கூட்டம்..!

0 comments
பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளுக்காக நடந்த இரங்கல் கூட்டம்..!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம், ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தின் சார்பில் கடந்த திங்கள்கிழமையன்று மாலை 5 மணியளவில் சென்னை தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் இருக்கும் தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது

இந்தக் கூட்டத்தில் ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், வைகோ, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் சி.மகேந்திரன், ஓவியர் வீர.சந்தானம், தமிழக பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் முருகன்ஜி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாகுல்ஹமீது, நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் அமீர், சேரன், கவுதமன், பாடகர் தேனிசை செல்லப்பா என்று பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

பொதுவாக கூட்டத்தை ஏற்பாடு செய்த கட்சியின் கிளைகளின் பொறுப்பாளர்கள்தான் எப்போதும் மேடை நிர்வாகத்தைக் கவனிப்பார்கள். ம.தி.மு.க.வின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் மேடையின் கீழேயே இருக்க.. வைகோவே இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பு வேலையையும் செய்தார்.




4 மணி என்று சொல்லியிருந்தாலும் 5 மணிக்குத்தான் கூட்டம் துவங்கியது. துவக்கத்தில் பாடகர் தேனிசை செல்லப்பா, பார்வதியம்மாள் நினைவாக ஒரு பாடலை உருக்கமாகப் பாடினார். அந்தப் பாடல் இதுதான் :

தாய்க்கு பிள்ளைகளின் கண்ணீரஞ்சலி
தாயே உன் மேல் ஆணை!

புலியை முறத்தில் அடித்தவள் தமிழச்சி
பழம் பெருமை செய்தி

புலியையே தன் வயிற்றில் வளர்த்து
தன் இனத்திற்கு தாரை வார்த்த தமிழச்சி நீ

மேம்பட்ட மருத்துவமனைகள் இங்கிருந்தும்
நோய்பட்ட உனை ஏற்று கவனிக்க தடைகள்

இதையறிந்தா பிறந்த மண்ணிலிருந்தே
பிரிய நினைத்தாய் எங்களைவிட்டு

உன் பூத உடலைக் காணவும் முடியாதே..
புலம்புகிறது உம்மினம்

நொந்து நொந்து இருந்ததே..
வெந்து செத்த
முள்ளி வாய்க்காலையும் மறக்க மாட்டோம்!
நீ முள்வேலிக்குள் அடைபட்டதையும்
மறக்க மாட்டோம்!

தாயே உன் மேல் ஆணை
தமிழீழம் அடையாமல் தமிழினம் அடங்காது..!

இயக்குநர் கவுதமன் பேசும்போதுதான் முதல் திரியைப் பற்ற வைத்தார். “பார்வதியம்மாளின் சாவு சாதாரண மரணமல்ல. கொலை.. ஆம்.. தி்ட்டமிட்ட கொலை.. தமிழக அரசும், மத்திய அரசும் செய்த திட்டமிட்ட படுகொலை..” என்று நேரடியாகவே தாக்கினார்.

நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் பேசிய சாகுல்ஹமீது, “இந்த நேரத்திலாவது நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். நமக்குள் ஒற்றுமை பொங்க வேண்டும். ஈழ மண்ணின் விடுதலையோடு தமிழ் மண்ணின் விடுதலையும் நமக்கு வேண்டும். அந்த நோக்கத்தில்தான் நாம் போராட வேண்டும்..” என்று வேறொரு பாணியில் பேசி முடித்தார்.



இயக்குநர்கள் அமீரும், சேரனும் மேடைக்கு வராமல் கீழேயே அமர எண்ணி இடம் தேடியதைக் கண்ட வைகோ தானே மேடையின் மறுகோடிக்கு வந்து அவர்களைக் கையசைத்து மேடைக்கு வரும்படி அழைத்து அமர வைத்தார். அதிலும் அமீர் மட்டும் வைகோவின் அருகில் மாட்டிக் கொள்ள.. சேரன் ஒரு ஓரமாக சென்று அமர்ந்தார். கொஞ்ச நேரம் கழித்து பின் வரிசைக்கு மாறியும் அமர்ந்து கொண்டார் சேரன்.

அமீரை பேச அழைத்தபோது நிறைய பேசுவார் என்று ஆசையோடு காத்திருக்க அஞ்சலியை ஒரே வரியில் முடித்துக் கொண்டார். ஆனால் சேரன் ஏமாற்றவில்லை..! “நமக்கு என்ன செய்தால் ரோஷம் வரும்..? என்ன நடந்தால் வீரம் வரும்.. ஈழத்தில் நடந்ததைபோல தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மீதும் பாலியல் வல்லுறவு, படுகொலைகள் நிகழ்ந்தால்தான் அது வருமா..? அதுவரைக்கும் நமக்கு சூடு, சொரணை வராதா..? அப்படியொன்று நடந்த பின்புதான் பார்வதியம்மாவின் ஆத்மாவும் சாந்தியடையும்..!” என்று கொஞ்சம் டென்ஷனை ஏற்றிவிட்டுப் போனார்.



தெய்வநாயகம் பள்ளியின் தாளாளர் தெய்வநாயகம் பேசும்போது, டாபிக் அடியோடு மாறியது. “ஈழத்துப் பிரச்சினை முடியாததற்குக் காரணமே பிராமணீயம்தான்..” என்றார். “பிராமணர்களால்தான் இந்தத் தமிழ்நாடு இந்த லட்சணத்தில் இருக்கிறது. எப்போதுமே தமிழர்களுக்கும், தமிழுக்கும் பிராமணர்கள்தான் எதிரி. நாம் வளர்வதை சிறிதளவும் பிராமணர்கள் விரும்பவில்லை. ஆகவேதான் எந்த வழியிலாவது நம்மை அழிக்க முற்படுகிறார்கள். காஷ்மீரில் அதிகளவு மக்கள் முஸ்லீம்கள்.. வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு மக்கள் கிறிஸ்தவர்கள்.. இவர்களை ஒழித்துக் கட்டத்தான் இப்போது பிராமணீயம் இங்கெல்லாம் இந்திய ராணுவத்தை நிறுத்தியிருக்கிறது. கொடூரத்தை நிகழ்த்தி வருகிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அத்தோடு நமக்குள்ளும் ஒற்றுமையில்லை. கூடவே மக்களும் தூங்கி வழிகிறார்கள். அவர்கள் பொங்கியெழுந்தால் மட்டுமே தமிழீழம் சாத்தியம்..” என்று பொங்கிவிட்டுப் போனார்..!

நடிகர் சத்யராஜ் பேசும்போது, “இறுதிவரையிலும் குடிசையில் வாழ்ந்த ஒரு தேசியத் தலைவரின் குடும்பம் எது என்றால் அது நமது தேசியத் தலைவர் பிரபாகரனின் குடும்பம்தான்..” என்றார். ஈழப் பிரச்சினைகள் பற்றி முன்னொரு காலத்தில் இயக்குநர் மணிவண்ணனின் அலுவலகத்தில் வைகோ, தனக்கு வகுப்பு எடுத்ததை நினைவு கூர்ந்தார் சத்யராஜ். “இனி இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படக்கூடாது. ஆனால் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளும் கட்சி பேதமில்லாமல் ஒன்றிணைந்து வழி காட்ட வேண்டும்..” என்று கோரிக்கையை வைத்தார். முடிக்கும்போது “நாடோடி படத்தில் வரும் ஒரு பாடலின் இடையில் இந்த வரிகள் வருகின்றன..” என்று சொல்லி “வருவான் தலைவன் வருவான். அவன் வரும் நாள் வரும்..” என்று முத்தாய்ப்பாகச் சொல்லி கைதட்டலை அள்ளிக் கொண்டு போனார்.



உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பேசும்போது, பிரபாகரன் குடும்பத்தினருடன் தனக்கு இருந்த நெருக்கத்தைக் குறிப்பிட்டு பேசினார். பிரபாகரன் சிறு வயதாக இருந்தபோது, மட்டக்களப்பில் குடியிருந்தார்களாம். அப்போது நடந்த சம்பவம் ஒன்றை பார்வதியம்மாள் பல ஆண்டுகளுக்கு முன்பாக தன்னிடம் சொன்னதாகச் சொல்லி அந்த விஷயத்தைச் சொன்னார் காசி ஆனந்தன்.

மட்டக்களப்பில் பிரபாகரன் குடும்பம் வசித்த வீட்டுக்கு எதிரில் வைத்தியர் நாகமணி பண்டிதர் என்பவர் தனது சகோதரருடன் குடியிருந்து வந்தாராம். ஒரு நாள் அவர் வீட்டுத் திண்ணையில் ஈஸிசேரில் சாய்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோது பிரபாகரன் எதற்கோ அவரைப் பார்த்து கல்லெறிய அது நாகமணி பண்டிதரின் நெற்றியில் பட்டு ரத்தத்தை வரவழைத்துவிட்டதாம்.

பண்டிதரை கல் தாக்கியதைப் பார்த்தவுடன் பிரபாகரன் தனது வீட்டுக்குள் ஓடிப் போய் தனது அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டாராம். நாகமணி பண்டிதர் பின்னாலேயே தேடி வந்தவர், பார்வதியம்மாளிடம், “உன் பையனை இதுக்கெல்லாம் தி்ட்டாத.. ஆனா அவன் பின்னாடி பெரிய ஆளாகப் போறது நிச்சயம். ஏன்னா, இப்பவே அவன் குறி தப்பாம அடிக்கிறான்..” என்று பாராட்டினாராம்.



வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இருந்த பனகொடை முகாம் பற்றிக் குறிப்பிட்ட காசி ஆனந்தன், அதே முகாமில் தான் சில ஆண்டுகள் கைதியாக இருந்ததையும், அங்கே தான் சித்ரவதைப்பட்டதையும் எடுத்துச் சொன்னார். அங்கேயிருந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின்போது தனது முகம் ஒட்டப்பட்ட போஸ்டரைத்தான் பயன்படுத்துவார்கள் என்கிற செய்தியையும் சொன்னார்.

ஈழம் முழுவதும் தற்போது சிங்கள மயமாகிவருவதைக் குறிப்பிட்ட காசி ஆனந்தன், ஈழத்தில் தற்போதுவரையிலும் 2076 சைவ ஆலயங்கள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். “இந்த ஆலயங்கள் இதுவரையில் மீளவும் கட்டப்படவில்லை. ஆனால் அதே சமயம் அனைத்து கிராமங்களிலும் தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள்..” என்று குற்றம் சாட்டினார். இதற்கு ஆதாரமாக சென்ற மாதம் மன்னார் பகுதி ஆர்ச் பிஷப் வெளியிட்ட ஒரு அறிக்கையை சுட்டிக் காட்டினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் பேசும்போது, “உலகத்தின் தலை சிறந்த அறிவாளிகளைப் பெற்றெடுத்தவர்கள் அனைவருமே தமிழ்த் தாய்கள்தான்.. அவர்களுடைய பிள்ளைகள் ஒருபோதும் சோடை போனதில்லை..” என்றார்.

“பார்வதியம்மாளின் இந்த மரணம் நிச்சயம் திட்டமிட்ட படுகொலைதான். இது படுகொலை இல்லை என்று சொல்ல கருணாநிதிக்கு தைரியம் உண்டா..?” என்று கேள்வியெழுப்பினார். கூடவே தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்குள் ஈழம் தொடர்பான விஷயத்துக்காக ஒற்றுமை அவசியம் என்று வலியுறுத்தினார். “தமிழன் நின்றுதான் போரிடுவான். புறமுதுகிட்டு ஓட மாட்டான். அதிலும் ஒருபோதும் மண்டியிட்டு மடிய மாட்டான்” என்றார்.



கடைசியாக பேச வந்த வைகோ பார்வதியம்மாளை மலேசியாவில் இருந்து சென்னைக்கு வரவழைத்தபோது சென்னை விமான நிலையத்தில் நடந்த விஷயங்கள் முழுவதையும் கோர்வையாகச் சொன்னார்.

“ஈழ மக்களுக்காக தற்போது இங்கேயிருந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் தேவையெனில் கடல் கடந்து செல்லவும் தயங்க மாட்டோம். இது அரசியல் கலப்பில்லாத மேடை. நம்பிக்கையுடன் இருக்கிறோம். அனைவரிடமும் கலந்து பேசுகிறோம். இணைந்துதான் போராட வேண்டும்..” என்றார்.

பார்வதியம்மாளை பற்றி உலகத் தமிழர் பேரவை வெளியிட்ட இரங்கல் கவிதையை உணர்ச்சிப் பெருக்கில் அவர் வாசித்துக் காட்டிய விதமே உருக்கத்தைக் கூட்டியது..!

பார்வதியம்மாள் பற்றி வைகோ பேசும்போது சில இடங்களில் கண் கலங்கி அழுதார். பார்வதியம்மாளும், வேலுப்பிள்ளையும் தமிழ்நாட்டில் இருந்தபோது தனது வீட்டிற்கு வந்ததையும், அவர்களுடைய காலடியில் தனது முதல் பேரனை கிடத்தி அவனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கச் சொன்னதையும் கம்மிய குரலில் நினைவுபடுத்தினார் வைகோ.

தற்போது சூடான் நாட்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை போல் ஈழத்தில் தமிழ் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி ஈழ விடுதலை பற்றித் தீர்மானிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “தேவையெனில் தமிழ்ப் பெண்களும் ஆயுதங்களை ஏந்த வேண்டும். அப்படியொரு கட்டாயத்திற்கு உலகச் சமுதாயம் நம்மை தள்ளிவிடக் கூடாது..” என்றும் எச்சரித்தார்.

“ராஜபக்சே போனால் இன்னொரு ராஜபக்சே வருவான். அவன் வந்து நமக்கு விடுதலை தருவான் என்று நாம் எதிர்பார்க்கவே கூடாது. இந்த ராஜபக்சேயைக்கூட அப்படியே விட்டுவிடக் கூடாது. எந்த ஜெயக்குமாரின் கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கி கொலை செய்தானோ அதேபோல் இந்த ராஜபக்சேயும் கொல்லப்பட வேண்டும்..” என்றார் ஆவேசமாக..


“இந்திய அரசு தெற்கே ஒரு காஷ்மீரத்தை உருவாக்குகிறது என்றும், தனித் தமிழ்நாடு கோரிக்கையை இதுவரையில் நாங்கள் கேட்கவில்லை. ஆனால் இனி கேட்கும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்..” என்றும் எச்சரிக்கையுடன் முடித்தார் வைகோ.


வைகோ வாசித்த உலகத் தமிழர் பேரமைப்பின் கவிதை இதுதான்:



கொண்ட தவம் பலிக்கும்..!
கோடியாண்டு பேர் நிலைக்கும்..!

பருவதத்தில் வதியும் அம்மா
பார்வதி அம்மா!
தெய்வப் பெயரம்மா - இன்று
தெய்வமானீர் அம்மா!

வேலனை எங்கள்
வெற்றித் திருமகனை
மூலனை எங்கள் முதல்வனை
முத்தமிழர் பகையழிக்கும்
காலனை எங்கள் காவலனை
கரிகால் வளவனைக்
கண்ணகிக்குக் கல்லெடுத்த
சேரனைச் செந்தமிழ்
மாமதுரை மன்னன் பாண்டியனை
ஓருருவாய்ப்
பிரபாகரன் என்னும்
பெரும்பெயரில் பெற்றளித்த
தாயே வணக்கங்கள்!
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

வேலுப்பிள்ளையெனும்
வீரத்திருமகனார்
பேர்விளக்க வேண்டிப்
பிரபாகரன் என்னும்
புலியீன்ற தாய்ப்புலியாம்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்

எட்டு கோடித் தமிழர்
எடுத்து அடி வைப்பதற்குக்
கிட்டாத தலைவன் எனும்
எட்டாத இமயத்தை
ஈன்றளித்த பேரிமயத்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

உரிமைக்குப் படை திரட்டி
ஓயாத அலையெழுப்பி
நரிமைக்குக் கரி பூசி
நயவஞ்சகர் அழித்து
நாடாண்ட பெரும் புயலை
ஈன்ற பெரும் புயலாம்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

ஊரறுத்த சிங்களனை
உறவறுத்த காடையனை
பேரறுத்து ஆர்க்க
பிரபாகரன் என்னும்
பேரிடியை வல்லிடியைப்
பெற்றளித்த பெருவானத்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

உலகத் தமிழரெல்லாம்
உள்ள உணர்வால்
உகுக்கும் கண்ணீரால்
உம்பாதம் பற்றி நின்று
உரைக்கும் சொல் ஒன்று!
உரைக்கும் சொல் ஒன்று!

கொள்ளி வைப்பானா பிள்ளை
கொள்ளி வைப்பானா பிள்ளை - எனக்
கோடிமுறை நினைந்து
நைந்திருப்பாய் நலிந்திருப்பாய்!
நாடி தளர்ந்திருப்பாய்!

கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
குமுறும் எரிமலையாய் வெடித்து
கோடியிடியாய் முழக்கமிட்டு
கொக்கரிக்கும் சிங்களனைக்
கொன்று தீயிலிட்டு
கொன்று தீயிலிட்டு அவனுக்குக்
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை

கொண்டவுன் தவம் பலிக்கும்
கோடியாண்டு உன் பேர் நிலைக்கும்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்..!

0 comments: