வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எவ்வாறெனினும், 2010ம் ஆண்டில் இலங்கையில் எதுவித பயங்கரவாத நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை அமெரிக்கா தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.
2009ம் ஆண்டில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச வலையமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடஅமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.புலிகளுக்கு ஆதரவான சில அறக்கட்டகளையும் நிதி திரட்டல் மற்றும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இந்தியாவிற்கு தப்பிச் சென்ற சில விடுதலைப் புலி உறுப்பினர்கள், மீள இயங்கும் முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பாரியளவு புலம்பெயர் தமிழ் மக்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சட்டவிரோத நிதி கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.சட்டவிரோத நிதி கொடுக்கல் வாங்கல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் பங்களாதேஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், நேபாளாம், கம்போடியா, ஆப்கானிஸ்தான், தென் கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளது.
0 comments:
Post a Comment