Friday, September 23, 2011

அமெரிக்காவில் மஹிந்தருக்குப் புதிய போர்க்குற்ற வழக்கு! கேணல் ரமேஷின் மனைவி தாக்கல்!!

0 comments

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீது, நியுயோர்க் நீதிமன்றத்தில் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி போர்க்குற்ற வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நியுயோர்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றிலேயே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஈஐஎன் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கை சட்டவாளர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தாக்கல் செய்துள்ளார்.

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தில் தனது கணவர் கேணல் ரமேசை, சிறிலங்காப் படையினர் அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் தடுத்து வைத்திருக்கும் காட்சியைப் பார்த்தாகவும், மற்றொரு தொலைக்காட்சி அவரது சடலம் கிடப்பதை காண்பித்தாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

சிறிலங்காவின் ஆயுதப்படைகள் அனைத்தினதும் பிரதம தளபதி என்ற வகையில், கேணல் ரமேசினது படுகொலைக்கும், தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே அடிப்படைப் பொறுப்பாளி என்றும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் போரின் இறுதிக்கட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் சிறிலங்காப் படைகளிடம் சரணடையச் சென்ற கேணல் ரமேஸ் பின்னர் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை அடுத்து நியுயோர்க்கில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.