Monday, January 24, 2011

இறுதிப் போரில் 40000பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் பதிலளிப்பதை தவிர்க்கும் மார்டின் நெஸ்கி – இன்னர்சிற்றி பிரஸ்!

0 comments

யுத்தத்தின் இறுதிப்பகுதியில் இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்கள் பல வாரங்களாக எழுப்பிவரும் கேள்விகளுக்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெஸ்கி பதிலளிப்பதைத் தவிர்த்து வருகின்றார் என்று இன்னர்சிற்றி பிரஸ் இணையதளம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பாகப் பேசும் உரிமை ஐ.நாவுக்கு உள்ளது என்று ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ- மூன் தெரிவித்துள்ள போதிலும் அது தொடர்பான விடயங்களை பான் கீ- மூனின் பேச்சாளர் தவிர்த்து வருகின்றார் என்று அந்த இணையதளம் மேலும் கூறியுள்ளது.
இன்னர்சிற்றி பிரஸ் இணையதளத்தில் மேலும் குறிப்பிடுகையில்,’மனித உரிமைகள் தொடர்பாகப் பேசும் கடமை ஐ.நாவுக்கு உண்டு” என்ற தலைப்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ -மூன் கடந்த சனிக்கிழமை ஐ.நா. செய்தி நிலையத்தின் ஊடாக உரை ஒன்றை வழங்கியுள்ளார்.
ஆனால், மனித உரிமைகள் தொடர்பான கேள்விகளை ஊடகங்கள் எழுப்பினால் பான் கீ-மூனின் பேச்சாளர் மார்டின் நெஸ்கி பதிலளிக்க மறுக்கிறார்.இலங்கை, மியன்மார் மற்றும் சீனா போன்ற நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக ஊடகங்கள் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்ற போதிலும் மார்டின் பதிலளிக்க மறுக்கின்றார்.
மனித உரிமைகள் பற்றிப் பேசும் மற்றும் உலகில் உள்ள அப்பாவிகளைக் காப்பாற்றும் ஐ.நாவின் அடிப்படை நோக்கத்தை தான் ஒருபோதும் மறந்துவிடவில்லை என்று ஐ.நா. செயலாளர் நாயகம் சனிக்கிழமை உரையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக மார்டின் நெஸ்கியிடம் கேள்வி எழுப்பியபோது அவர் அதற்குப் பதிலளிக்காது பல வாரங்களாகத் தவிர்த்து வருகின்றார்.
ஐ.நா.நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம், ஐ.நா.மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கத்ரினா பிரேக்கின் இலங்கை விஜயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்ட போதிலும் மார்டின் பதிலளிக்கவில்லை என அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

0 comments: