Tuesday, January 25, 2011

வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஐ.நா சபையில் கேள்வி.

0 comments


வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் படைத்தரப்பினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் நாளாந்த செய்தி விபரிப்பின் போது, பேச்சாளர் மார்டின் நெசர்ஸ்கியிடம் செய்தியாளர்கள் இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர். அண்மையில் இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் வெள்ளைக் கொடிகளுடன் வந்த புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சரணடைவதற்கு முன்னர் செய்மதி தொலைபேசியின் ஊடாக விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி ஏன் மேரி கொல்வின்னுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் தெரிவித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய நாடுகள் சபையின் மேலதிகாரி விஜய் நம்பியாரும் பங்கு கொண்டிருந்தார். சரணடைவது தொடர்பில் இரண்டு தரப்பினரும் இணங்கிக் கொண்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் உறுதியளித்தமையை அடுத்தே விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைந்துள்ளனர். எனினும் அரசாங்கம் தமது உறுதி மொழியை மீறி, அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஏ மேரி கொல்வின் தன்னை மன்னிக்குமாறும், தம்மால் ஏதும் செய்ய முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இது வெறுமனே இடம்பெற்றது இல்லை எனவும், ஏற்கனவே பேசி இணங்கிக் கொண்டதன் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைந்தனர் எனவும் ஆனால், உறுதி மொழி மீறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்ட மற்றுமொரு நபரான விஜய நம்பியாரின் அதன் பின்னரான செயற்பாடுகள் என்ன என ஐக்கிய நாடுகள் சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பில் விஜய் நம்பியார் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளதாக தாம் அறிவதாகவும், எனினும் இது தொடர்பில் பரிசீலிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அல்ஜசீராவுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே விஜய் நம்பியார் இந்த விளக்கமளிப்பை மேற்கொண்டிருந்தார். எனினும் விஜய் நம்பியார் ஏக பிரதிநிதியான ஏன் கொல்வின் இதற்கு மாறுப்பட்ட கருத்தை முன்வைக்கிறாரே என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து, கருத்து வெளியிடுவது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி குறித்த ஐக்கிய நாடுகளின் செய்தியாளரை எச்சரித்துள்ளார். பெயர்களை குறிப்பிட்டமை தொடர்பிலா தம்மை அவதானமாக இருக்க கூறுகிறீர்கள் என செய்தியாளர் கேட்டமைக்கு, இல்லை எனவும், சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்புகின்ற பார்வை கோணம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரியதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் தாம் பரிசீலிப்பதாக பேச்சாளர் மார்டின் நெசர்கி குறிப்பிட்டுள்ளார்.
http://www.eelampres.../2011/01/11639/

0 comments: