Saturday, June 5, 2010

தனி ஈழமே தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு! – லீ க்வான் யு

0 comments
ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி: அவரைத் திருத்தவே முடியாது! – சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ க்வான் யு



லங்கை
அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது. தனி
ஈழம் ஒன்றே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறியுள்ளார்
சிங்கப்பூரின் முதல் பிரதமரான் லீ க்வான் யு.
சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் லீ க்வான் யுவும்
ஒருவர். இவரது மகன்தான் தற்போதைய சிங்கப்பூரின் பிரதமர்.
மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு, எந்த இயற்கை வளமும்,
குடிநீர் வசதியும் கூட இல்லாமல் தவித்த சிங்கப்பூரை பெரும் வர்த்தக மையமாக
மாற்றியவர். வல்லரசுகளுக்கு இணையாக உருவாக்கியவர் என புகழப்படுபவர்.
இன்றும் சிங்கப்பூர் அரசில், அமைச்சர்களின் வழிகாட்டி (Ministers Mentor) என மூத்த அமைச்சர் பொறுப்பை வகிக்கிறார் லீ.
லீ குவான் யுடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் சமீபத்தில் ‘Citizen
Singapore: How To Build A Nation – Conversations with ’ என்றக நூல்
வடிவில் வெளியாகியுள்ளது.
அந்த நூலில் இலங்கை இனப் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் லீ குவான் யு விரிவாக விளக்கியுள்ளார்.
இலங்கைப் பிரச்சினை குறித்து அவர் இப்படி கூறியுள்ளார்:
இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.
ஆனால் தொடர்ச்சியான சிங்களர் மேலாதிக்கம் இரு இனங்களுக்குள்ளும் மோதலை
ஏற்படுத்திவிட்டது. தமிழரின் உரிமைகளை தெரிந்தே மறுக்கிறது சிங்களம்.
அரசியல் அதிகாரத்துக்காக சிங்களர்களை தமிழர்களுக்கு எதிராகத் தூண்டி
வருகிறார்கள் சிங்கள அரசியல்வாதிகள்.
இலங்கை மகிழ்ச்சியான நாடாக இனியும் இருக்க முடியாது. தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இனி உருவாகவும் முடியாது.
இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்.
இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள்
வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு
காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை
மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள்
அடங்கிக் கிடக்க மாட்டார்கள், சிங்களர்களுக்குப் பயந்து ஓடிவிடவும்
மாட்டார்கள். ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்து போராடுவார்கள். சர்வதேசம் இதனை
மெதுவாகப் புரிந்து கொண்டுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர்
ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்ற
முடியும் என்று நான் நம்பவில்லை. அவரைத் திருத்தவே முடியாது” என்று
கூறியுள்ளார்.
தமிழருக்குதான் அதிக மரியாதை தர வேண்டும்!
அவரிடம் இந்த நூலின் ஆசிரியர் டாம் பிளேட் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.
“இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. மெஜாரிட்டியான சிங்களர்கள்,
விடுதலைப் புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான
தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை.
யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம்வெல்லவே முடியாது. அதனால்தான்
அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள்.
முன்பும் இப்படித்தான்செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக
வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயலுகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்
இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது
என்று நான் கருதுகிறேன்.
இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால்
சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம்
காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள
அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை, சிங்களர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை
தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான்.
மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட
சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல
இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால
உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது,” என்று
கூறியுள்ளார் லீ.
இந்த நூலை முன்னணி பத்திரிக்கையாளரும், லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவருமான
பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை
வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழவே முடியாது, தமிழ் ஈழம்
மலர்ந்தால்தான் இலங்கையில் அமைதி திரும்பும் என்பதை தனது கருத்தின் மூலம்
அழுத்தம் திருத்தமாக லீ வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீ க்வான் யு பற்றி…
1923-ல் பிறந்த லீ க்வான் யுவுக்கு இப்போது 86 வயது. 1959-ல்
சிங்கப்பூரின் பிரதமரானார். 1990-ம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் சிங்கப்பூரின்
பிரதமாராக இருந்தவர். உலகில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற
பெருமைக்குரியவர்.
1990 நவம்பரில், தானே முன்வந்து பதவி விலகினார். ஆனால் அவரது நிர்வாகத்
திறன் சிங்கப்பூருக்கு முழுவதுமாக பயன்பட வேண்டும் என்பதற்காக 1990-ம்
ஆண்டு மூத்த அமைச்சர் என்ற பதவியை உருவாக்கினர். அவரை வழிகாட்டியாகக்
கொண்டு ஆட்சியைத் தொடர்ந்தார் புதிய பிரதமர் கோ சோ டோங்.
2004-ம் ஆண்டு லீயின் மூத்த மகன் லீ ஸெய்ன் லூங் சிங்கப்பூர்
பிரதமராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து அமைச்சர் வழிகாட்டி என்ற புதி்ய
அமைச்சு உருவாக்கப்பட்டு அதில் லீ க்வான் யு அமர வைக்கப்பட்டார். உலகில்
வேறு எந்த நாட்டிலும் இல்லாத அமைச்சகம் இது. லீயின் வழிகாட்டுதல்களுடன்
அமைச்சரவையை நடத்த உருவாக்கப்பட்டது இந்தப் பதவி. ஆக 1959லி-ருந்து
பதவிகளின் பெயர் மாறினாலும், சிங்கப்பூர் அரசின் பிரிக்க முடியாத
அங்கமாகத் திகழ்பவர் லீ.
உலகில் தனக்கு மிகப் பிடித்த அரசியல் தலைவர் மற்றும் நிர்வாகி லீ
க்வான் யுதான் என பல முறை தனது பேட்டிகளில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளது
நினைவிருக்கலாம்.
-என்வழி

0 comments: