Monday, February 21, 2011

பார்வதியம்மாளுக்கு சென்னையில் அஞ்சலி கூட்டம்... வைகோ பங்கேற்பு!

0 comments
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளுக்கு
நாளை திங்கள்கிழமை சென்னையில் இரங்கல் மற்றும் புகழஞ்சலிக் கூட்டம்
நடக்கிறது.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பழ
நெடுமாறன் தலைமை வகிக்கும் இக்கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலர் வைகோ
உள்பட தலைவர்கள் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

தமிழ்
ஈழ தேசியத் தலைவர் பிரபாகரனைத் தன் மணி வயிற்றில் சுமந்த அந்த வீரத்தாயின்
மரணச் செய்தி, இதயத்தில் ஈட்டியாகப் பாய்ந்தது. தமிழ் ஈழத்தின்
தவப்புதல்வனைப் பெற்ற அந்தத் தாய்க்கு, அவரது வாழ்நாளில் ஏற்பட்ட துயரம்,
விவரிக்கவே இயலாத கொடுந்துன்பம் ஆகும். தன் வீர மைந்தனைத் தங்கள்
நெஞ்சங்களிலே பூசித்த கோடானு கோடித் தமிழர்களை எண்ணி அவர் பெருமிதம்
கொண்டு இருந்தாலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வீரப்பிள்ளைகளும்,
வீராங்கனைகளும் வெஞ்சமரில் மடிந்த போது, வேதனைத்தீயில் துடித்தார்.

உத்தமர்
வேலுப்பிள்ளையும் அன்னை பார்வதி அம்மையாரும் என் இல்லத்துக்கு வந்து, என்
பேரனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டியதும் என் மகனின் திருமணத்துக்கு
இருவரும் வந்து வாழ்த்தியதும், என் வாழ்வில் நான் பெற்ற பேறுகள் ஆகும்.
பார்வதி அம்மையாருக்குப் புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகம்
முழுவதும் அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து, இரங்கல் ஊர்வலங்கள்,
இரங்கல் கூட்டங்கள் நடத்துமாறும் வேண்டுகிறேன்.

இலங்கைத் தமிழர்
பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணி அளவில்,
தியாகராயநகர், வெங்கட் ரமணா சாலையில் உள்ள செ.த. நாயகம் மேனிலைப்பள்ளி
வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடக்கிறது. பழ.நெடுமாறன், தலைமை ஏற்க, நானும்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும், தமிழ்
உணர்வாளர்களும் பங்கேற்கிறோம். புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் அனைவரும்
திரளாகப் பங்கேற்கும்படி வேண்டுகிறேன்..."

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் வைகோ.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

ஈழத்
தமிழர்களின் சன நாயக உரிமைகளுக்காகவும், சொந்தமண்ணில் சம உரிமைகளுடனும்,
சுயமரியாதையுடனும் வாழவும் போராடிய போராளி பிரபாகரனின் தாயார்
பார்வதியம்மாள் காலமானார் என்ற துயரச் செய்தி ஈழத் தமிழர்களை மட்டுமின்றி,
உலகெங்கும் வாழும் தமிழர்களையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது.

கடந்த
ஓர் ஆண்டு காலமாக கடும் நோயினால் அவதிப்பட்டு மருத்துவ மனையில் சிகிக்சை
பெற்று வந்த பார்வதியம்மாள், சிகிச்சை பலனின்றி காலமானதைத் தொடர்ந்து
துயரத்திற்கும், அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிற அவரது
குடும்பத்தினருக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,
அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

தட்ஸ்தமிழ்

0 comments: