Tuesday, October 5, 2010

சரணடையும் புலிகளை சுட்டுக் கொல்லுமாறு பாதுகாப்புச் செயலர் உத்தரவு பிறப்பித்தார் - பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் ஆசிரியர் சாட்சி

0 comments
திகதி:05.10.2010
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வருகின்ற விடுதலைப்புலித் தலைவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்கு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ் நேற்று நீதி மன்றத்தில் தெரிவித்தார்.
வன்னி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப்புலித் தலைவர்களைச் சுட்டுக் கொன்றமை குறித்து சரத்பொன்சேகா தெரிவித்த கருத்துத் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணை இடம்பெற்றது. இவ் வழக்கு விசாரணைக்கு சரத் பொன்சேகா அழைத்து வரப்பட்டிருந்தார்.
நீதவான் தீபாலி விஜயசுந்தர, டபிள்யூ.டி.எம்.பி.வாரவெல மற்றும் எம்.இசாட் ரசீம் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ் சாட்சியமளித்தார்.அந்தச் சாட்சியில் அவர் பின் வருமாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அத்தேர்தலில் வேட்பாளரான சரத்பொன்சேகாவின் வாழ்க்கைக் குறிப்பைத் தொகுப்பதற்காக அவரைச் செவ்விகாணத் திட்டமிட்டேன்.அச் செவ்வியின் இறுதியில், போரின் கடைசிக் கட்டத்தில் என்ன நடந்தது? எனக் கேள்வி ஒன்றைக் கேட்டேன்.
அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் குழுவொன்று சரணடைய வருவதாகவும் அவர்களைச் சரணடைய விடாமல் சுட்டுக் கொல்லுமாறு பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்குப் பாதுகாப்புச் செயலாளர் தொலை பேசி மூலம் உத்தர விட்டதாகத் தனக்குத் தகவல் கிடைத்தது எனப் பொன்சேகா கூறினார்.அது பரபரப்பான தகவல் என்பதால் அதை அவ்வாறே சண்டேலீடர் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக்குவதற்குத் தீர்மானித்தேன்.
அச் செய்தியை வெளியிடுவதற்கு முதல் நாள் சரத் பொன்சேகாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது குறித்துத் தெரிவித்தேன். அவர் பிரச்சினையில்லை என்றார்.இவ் விடயம் குறித்துப் பிரிகேடியர் சவீந்திர சில்வா மற்றும் அப்போதைய இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் இச் சம்பவத்தை நிராகரித்தனர் என்றார்.இவ் வழக்கு மீண்டும் நாளை விசாரிக்கப்படவுள்ளது.

0 comments: