விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கரிகாலன் இறுதிப்போரின் போது கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்காவின் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் [கருணா] தெரிவித்துள்ளார்.
‘லக்பிம நியூஸ்‘ ஆங்கில வாரஇதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 17ம், 18ம் திகதிகளில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யோகி, பாலகுமாரன், கரிகாலன், லோறன்ஸ் திலகர், புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட பலர் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்திருந்தனர்.
இவர்கள் சிறிலங்காப் படையினரால் பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதை அவர்களின் உறவினர்கள் நேரில் கண்டுள்ளனர்.
அதன் பின்னர் இவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர், இவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த எந்த விபரங்களும் வெளியாகவில்லை.
ஆனால் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் இறுதிப்போரிலேயே கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தற்போது கூறி வருகிறது.
முன்னதாக யோகி, பாலகுமாரன் ஆகியோர் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் தடுப்புக்காவலில உள்ளவர்களில் அவர்கள் இல்லை என்றும் அமைச்சர் டியு.குணசேகர கூறியிருந்தார்.
தற்போது அமைச்சர் முரளிதரன் கரிகாலனும் இறுதிப் போரில் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பெரும்பாலான புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்து விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
போரின் முடிவில், கொல்லப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட புலிகளின் முக்கிய தலைவர்களின் பட்டியலில், படையினரிடம் சரணடைந்த புதுவை இரத்தினதுரை, கரிகாலன், யோகி, பாலகுமாரன், லோறன்ஸ் திலகர் போன்றோரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
ஆனால் இப்போது சிறிலங்கா அரசாங்கம் அவர்கள் சரணடையவில்லை என்றும் போரிலேயே கொல்லப்பட்டதாகவும் கூறிவருகிறது.
பொட்டுஅம்மானின் சடலம் படையினரால் கண்டுபிடிக்கப்படாத போதும் அவரும் இறந்து விட்டதாக அறிவித்திருந்தது சிறிலங்கா அரசாங்கம்.
அதுபோலவே அரசாங்கம் கூறுவது போன்று பாலகுமாரன், யோகி, புதுவை இரத்தினதுரை, கரிகாலன் போன்ற முக்கிய தலைவர்களும் இறுதிப் போரிலேயே கொல்லப்பட்டிருந்தால், இவர்களின் பெயர்களை அந்தப் பட்டியலில் பாதுகாப்பு அமைச்சு சேர்க்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளளது.
அதேவேளை ‘லக்பிம நியூஸ்‘ வாரஇதழுக்கு அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அளித்துள்ள செவ்வியின் மேலும் கூறியுள்ளதாவது,
“ வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு.
சிங்கள மக்கள் ஏன் வடக்கில் குடியேறக் கூடாது.?
அங்கு 1983ம் ஆண்டுக்கு முன்னர் பல சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்தன.
அவர்கள் மீளக் குடியேற வேண்டும். அவர்கள் தம்மிடம் ஆவணங்களை வைத்திருந்தால் யாழ்ப்பாணம் திரும்ப முடியும்.
இது குடியேற்றம் அல்ல.
வடக்கு நோக்கி சிங்கள வர்த்தகர்கள் படையெடுப்பதாக சில தமிழ் ஊடகங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
ஆனால் சிங்கள வர்த்தகர்கள் அங்கு சென்றுள்ளதால் தான் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.
விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக இனிமேல் தலையெடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.
ஆனால் அவர்கள் இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியாக தம்மை மீளமைக்க முனைகிறார்கள்.
லண்டனில் நடந்த போராட்டத்தில் புலிகளின் கொடிகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏந்தியிருந்தனர்.
புலம்பெயர் தமிழர்களைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கத்தை மிரட்டிப் பணிய வைக்க பிரித்தானியா முனைகிறது.
பிரித்தானியா தடைசெய்துள்ள 40 பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் புலிகள் இயக்கமும் அடங்கியுள்ளது.
அல்கெய்டா ஆதரவாளர்கள் லண்டன் நகர மையத்தில் ஒசாமா பின்லேடனின் படத்துடன் ஆர்ப்பாட்டம் செய்வதை பிரித்தானியா அனுமதிக்குமா?
புலம்பெயர் தமிழர்கள் தனியரசு அமைப்பது பற்றிக் கொண்டிருப்பது விளையாட்டுத்தனமான கருத்து.
அவர்களுக்கு வடக்கு,கிழக்கின் உண்மையான களநிலவரம் பற்றிய எதுவும் தெரியாது.
அவர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒரு சதத்தைக் கூடச் செலவிடவில்லை.
புலம்பெயர் தமிழர்களை வெற்றி கொள்வதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கடுமையாக உழைக்க வேண்டும்.
ஒவ்வொரு பிரதான தூதரகங்களுக்கும் பொருத்தமான தூதுவர்களை நியமிக்க வேண்டும்.
அவர்கள் தமிழர்களையும் புலம்பெயர்ந்தோரையும் இணைக்க வேண்டும்.
தற்போதுள்ள தூதுவர்கள் தகைமையுள்ளவர்களாக இருந்தாலும் புலம்பெயர்ந்தோருக்கும் தூதுவர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி உள்ளது.“என்று அவர் மேலும் கூறியுள்ளார்.