Tuesday, December 14, 2010

தமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிக்கை

0 comments
இலங்கையில் தமிழர்கள் என்ற உரிமையுடனும் உணர்வுடனும் எவரும் வாழ முடியாது என்பதை சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து உலகுக்கு நிருபித்து வந்துள்ளது.அதன் ஒரு பகுதி தான் இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாட விதிக்கப்பட்டுள்ள தடையாகும்.


இதுவரை தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள இலங்கை அரசு நிகழ்ச்சிகளிலும், அலுவலகங்களிலும் சிங்கள அரசின் தேசிய கீதம் தமிழில் பாடப்படும்.

இந்த தேசிய கீதம் தமிழர்களின் அடிமை கீதம் என்பதால் தமிழர்கள் விரும்பவில்லை.ஆனாலும்,தமிழர்களை சம மரியாதையுடன் நடத்துவதாக உலகுக்கு பொய்த்தோற்றம் காட்ட சிங்கள அரசு இதுகாறும் இதனைச் செய்து வந்தது.

ஆனால் இந்த பொய்த் தோற்றத்தைக் கூட ரத்து செய்யும் மமதை நிலைக்கு ராஜபக்‌ஷே தற்பொழுது வந்துள்ள நிலையின் காரணமாக தமிழில் சிங்கள தேசிய கீதம் பாடுவதை அதிபர் ராஜபக்சே ரத்து செய்து உள்ளார்.ஏற்கனவே தமிழர்களின் தாயகத்தை தமிழர்களிடம் இருந்து பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிய சிங்களர்கள் இனி தமிழர்களை அங்கு வாழக் கூட அனுமதிக்கப் போவதில்லை என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலைக்குப் பின் உலகிற்கு சிங்கள அரசு பகிரங்கமாகச் சொல்வது என்னவென்றால், இது சிங்கள நாடு.எங்கள் சிங்கள தேசத்தின் தேசிய கீதத்தை சிங்களத்தில் தான் பாடுவோம்.இங்கு சிங்களர்கள் மட்டும் தான் வாழ முடியும்,தமிழர்களுக்கு இங்கு இடம் இல்லை என்பதே.

இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் சமீபத்திய கண் துடைப்பான இலங்கைப் பயணமும்,தமிழர்கள் பிரச்சனையில் இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கைக்கு தராது என்ற சிவசங்கரனின் பேட்டியுமாகும்.சிங்களத்தின் இந்த போக்கை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும்,தொடரும் ராஜபக்‌ஷேவின் சிங்கள இனவெறியை டெல்லிக்கு கடமைக்கு அனுப்பப்படும் கண்டன கடிதங்கள் எக்காலத்திலும் முடிவுக்கு கொண்டு வராது என்பதை இங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும்.

தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டமே சிங்கள இனவெறியை முடிவுக்கு கொண்டு வரும் என்பதை சமீபத்தில் ராஜபக்‌ஷேவுக்கு எதிராக லண்டனில் நடந்தேறிய ஒன்றுபட்ட போராட்டம் நமக்கு உணர்த்தியுள்ளது.

மேலும் எம் ஈழ மண்ணில் தமிழீழ தேசிய கீதம் பாடுவதும், புலிக்கொடி பறப்பதுமே ஒரே தீர்வு என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம். அந்த நாளை நோக்கி நம் போராட்டப் பயணம் தொடரும்.

0 comments: