Monday, December 20, 2010

பூசா முகாமுக்கு 29 ஆம் திகதி ஆணைக்குழுவினர் விஜயம்

0 comments
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவினரும் அதன் அதிகாரிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி காலி பூசா தடுப்பு முகாமுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். ஆணைக்குழு உறுப்பினர்கள் பூசா தடுப்பு முகாமுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமைகளை ஆராயவுள்ளதுடன் அவர்களின் விடுவிப்பு தொடர்பான சாத்தியங்களை ஆராயவுள்ளதாகவும் அதிகாரி மேலும் கூறினார்.

அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் வெளிமாவட்டங்களில் நடத்தப்பட்டபோது தாம் அனைத்து தடுப்பு முகாம்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஏழாம் திகதி முதல் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகளை புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, குறிப்பிட்ட மாவட்டங்களின் அரசாங்க அதிபர் அலுவலகங்கள் மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு மாவட்டங்களிலும் நடைபெறும் அமர்வுகளில் பொது மக்கள் கலந்துகொண்டு சாட்சியங்களை அளிக்கமுடியும். பொது மக்கள் பகிரங்கமாகவோ அல்லது இரகசியமாகவோ தங்கள் சாட்சியங்களை அளிக்கமுடியும் என ஆணைக்குழுவின் அதிகாரி குறிப்பிட்டார். ஏழாம் திகதி முதல் நான்கு தினங்களுக்கு இப்பகுதிகளில் அமர்வுகள் நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து பல வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது புத்தளம் மாவட்டத்தில் வசிக்கின்ற முஸ்லிம் மக்களும் ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகளில் சாட்சியமளிப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நடைபெற்றுள்ளன.

மேலும் கொழும்பில் நடைபெற்றுவரும் ஆணைக்குழுவின் அமர்வுகளில் பலதரப்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சாட்சியமளித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது

tamilulakam.com

0 comments: