Sunday, December 19, 2010

பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றார்: அமைச்சர் மேர்வின் பகிரங்க எச்சரிக்கை

0 comments
பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றார்:  அமைச்சர் மேர்வின் பகிரங்க எச்சரிக்கை

Posted Image
சிங்களத் தேசியப் பத்திரிகையொன்றின் ஆசிரியருக்கு என் கையால் தான் சாவு நேரும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

“என்னைப் பற்றி ஒரு சிங்களத் தேசியப் பத்திரிகை தொடர்ந்தும் தாறுமாறாக விமர்சிக்கின்றது. நானும் முடிந்த மட்டும் பொறுத்துக் கொண்டிருக்கின்றேன். என்னைப் பற்றிய விமர்சனங்களை அப்பத்திரிகை நிறுத்திக் கொள்வது நல்லது. அப்படியல்லாது என்னைப் பற்றி தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருந்தால் அதன் ஆசிரியர் என் கையால் தான் கத்திக்குத்து வாங்கிச் சாக நேரும்” என்று அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

கொழும்பு-07ல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பு அமைச்சில் நேற்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் வழங்கப்படும் தண்டனைகள் போதுமானதாக இல்லை. அதன் காரணமாகவே நானாகவே சிலருக்கு சிலவேளைகளில் தண்டனை வழங்கியுள்ளேன். அதே நேரம் நான் இதுவரை எந்தக் குற்றமும் செய்ததில்லை.

எந்தவொரு பொதுமகனும் அரசாங்க நிறுவனமொன்றில் தனக்குத் தேவையான விடயத்தைச் செய்துகொள்ள முடியாது போனால் என்னை நாடி வரலாம். அதற்கான நடவடிக்கைகளை நான் எடுப்பேன்.

ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் உதவி செய்கின்றார்கள். ஆனாலும் ஊடகவியலாளர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. அவ்வாறான நிலையைப் போக்க நான் இருக்கின்றேன். என்னிடம் உதவி கோரும் ஊடகவியலாளர்களுக்கும் நான் உதவி செய்யத் தயாராக இருக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
http://inioru.com/?p=18786

0 comments: