Monday, December 13, 2010

இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டும் என்று ஜனாதிபதியும் அமைச்சரவையும் மேற்கொண்டுள்ள தீர்மானத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

0 comments
இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டும் என்று ஜனாதிபதியும் அமைச்சரவையும் மேற்கொண்டுள்ள தீர்மானத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலங்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், சிங்கள பௌத்த மக்கள் இல்லாத தமிழ் மக்களின் பிரதேசங்களில் பௌத்த கோவில்களை கட்டி வருகின்ற நிலையிலும் தற்போது தேசிய கீதமும் தனிச் சிங்களத்தில் மட்டுமே பாடப்படல் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இது மீண்டும் 1956 ஆம் ஆண்டு காலக்கட்டங்களை போன்று தமிழ் மக்கள் மீது சிங்களத்தை திணிக்கும் செயலாகவே பாhக்கக் கூடியதாய் உள்ளது. அது மாத்திரமல்லாமல் இந்நடவடிக்கையானது தமிழ் மக்களை ஒரு கலாச்சார படுகொலைக்குள் தள்ளுகின்ற நிகழ்ச்சியாகவே தோற்றமளிக்கின்றது.

அரசியல் சாசனத்தின் உறுப்புரிமை 7, அட்டவணை 3ல் தேசிய கீதம் தமிழில் பாடப்படுதல் தொடர்பாகவும், தமிழில் பாடல் வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அரசியல் சாசனத்தில் உள்ள விடயங்களை மீறும் செயற்பாடானது அப்பட்டமான இனவாத நடவடிக்கையாகும். 1956 ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்களம் மாத்திரம் என்ற சட்டத்தினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் பின்பு தான் 1988 ஆம் ஆண்டு தமிழும் அரச கரும மொழியாக்கப்பட்டது.

இவ்வாறிருக்கையில் அரசாங்கம் இந்த அமைச்சரவை முடிவை மீளப் பெற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பார்களானால் தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் தேசிய கீதத்தினை பகிஸ்கரிக்க தள்ளப்படலாம். அமைச்சரவையில் சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தினை மேற்கொண்ட போது வெளிநாடுகளில் தேசிய கீதங்கள் ஒரு மொழியில் மட்டுமே உள்ளதாகவும் இந்தியாவில் ஹிந்தி மொழியில் மாத்திரமே உள்ளதாகவும் விமல் வீரவன்ச உட்பட அமைச்சர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

உண்மையில் அவர்களுக்கு உலக நடப்புக்கள் குறித்த தெளிவு எதுவும் இல்லை என்பதால் சில விடயங்களைக் குறிப்பிடுகின்றோம், இந்திய தேசிய கீதம் ஹிந்தி மொழியில் எழுதப்படவில்லை. அதனை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர், அவர் இந்தியாவின் சிறுபான்மை இனங்களில் ஒன்றான வங்காள இனத்தினைச் சேர்ந்தவராவார். அவர் எழுதிய வங்காளி மொழியிலேயே இந்திய தேசிய கீதம் உள்ளதையும், இந்தியாவின் முதன்மை மொழிகள் பல இருக்கும் நிலையில் சிறுபான்மை இனம் ஒன்றிற்குச் சொந்தமான மொழி ஒன்றிலேயே அங்கு தேசிய கீதம் இசைக்கப்படுவதையும் அமைச்சர்களுக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

அதேவேளை கனடாவில் மூன்று மொழிகளிலும், சுவிட்ஸலாந்தில் நான்கு மொழிகளிலும், தென் ஆபிரிக்காவில் ஐந்து மொழிகளிலும் தேசிய கீதங்கள் இசைக்கப்படுகின்றன. சரியான காரணங்கள் இன்றி பொருத்தமற்ற நேரத்தில் இனவாத நோக்கில் தேசிய கீதத்தினை சிங்களத்தில் இசைக்க சொல்வதானது தமிழ் பகுதிகளை சிங்கள மயப்படுத்த எடுக்கும் தமிழருக்கு எதிரான ஒரு செயற்பாடாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர். இந்நடவடிக்கையானது இனங்களுக்கிடையில் ஒற்றுமையையோ புரிந்துணர்வையோ கொண்டு வரமாட்டாது என்பதுடன் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்களை குழப்பங்களை தொடர்ச்சியாக வைத்திருக்கவே இது உதவும் என்ற காரணத்தாலும் இந்நடவடிக்கையினை உடனடியாக கைவிடவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.

சுரேஷ்.க.பிறேமச்சந்திரன் பா.உ
பேச்சாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு.

0 comments: