Monday, December 20, 2010

காயமடைந்த போராளிகளை காப்பாற்றவே சரணடைகின்றேன் – நடேசனின் மகன் சாட்சியம் – நாடுகடந்த தமிழீழ அரசு

0 comments
இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள், நாடு கடந்த தமிழீழ அரசினால் ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளிவராத போர்க்குற்ற ஆவணங்களை தகுந்த சாட்சியங்களுடன் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசனின் மகனின் வாக்குமூலமும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஸ் அவர்களின் மனைவியின் வாக்குமூலமும் இணைக்கப்பட்டுள்ளது.

நடேசன் அவர்களின் மகன் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தவை வருமாறு:

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் தன்னுடன் இருப்பதாகவும் அதனால் தாங்கள் அவர்களை காப்பாற்றுவதற்காக சரணடைய முடிவெடுத்துள்ளதாகவும்தெரிவித்தார். இதுபற்றி ஐக்கிய நாடுகளின் ராசதந்திரகளுடன் கதைத்துள்ளதாக கூறினார்.

இன்னும் அரை மணித்தியாலயத்தில் தன்னோடு தொடர்பு கிடைக்கவில்லை என்றால் தங்களுடைய வாழ்வு முடிந்துவிட்டது என்று கருதுமாறும் கூறினார்.

எனது தந்தையுடன் புலித்தேவன் அவர்களும் இருந்தார். சரணடைந்த இவர்களை சிறிலங்கா இராணுவத்தினர் அழைத்துசென்றனர். அதனை பார்த்தவர்கள், இப்போதும் தாயகத்தில் வசித்துவருகின்றார்கள்.

ஐக்கியநாடுகள் சபை போதிய பாதுகாப்பு உத்தரவாதம் தரும் எனில் அவர்கள் நேரடியாக சாட்சியம் அளிப்பார்கள்.

- என தெரிவித்தார்.

இதேவேளை தளபதி ரமேஷ் அவர்களின் மனைவி அளித்த வாக்குமூலத்தில் தனது கணவனின் நிலையை தனக்கு தெரியப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையை கேட்டுள்ளார்.

இத்துடன் தமிழீழ தாயகத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலுமில்லங்களை புல்டோசர்கள் மூலம் கிளறி அழித்தமை ஐக்கிய நாடுகளின் சர்வதேச கோட்பாடுகளுக்கு எதிரானது எனவும் அதற்கான உரிய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilthai.com/?p=7094

0 comments: