Saturday, May 8, 2010

கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது

0 comments
கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது
சனிக்கிழமை, மே 8, 2010, 9:34[IST]

தென்காசி: கேரள மாநிலம் கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கேரளா வழியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயலக் கூடும் என கேரள மாநில உளவுத்துறைக்கு, மத்திய உளவுத்துறை ஒரு தகவல் அனுப்பியது.

இந் நிலையில், கொல்லத்தில் மர்மமான முறையில் பலர் ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் போனது.

இதையடுத்து திருவனந்தபுரத்திலிருந்து உளவுத்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணகுமார் தலைமையில் விரைந்து வந்த போலீஸார், கொல்லத்தில் உள்ள சைன்ஸ் என்ற ஹோட்டலில் ரெய்டு நடத்தினர்.

அப்போது அங்கு கிட்டத்தட்ட 50 பேர் தங்கியிருந்தனர். அவர்களில் 4 பெண்கள் உள்பட 32 பேர் மட்டும் தமிழர்கள். இவர்களை தனியாகப் பிரித்து விசாரித்தபோது, தாங்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் போலீஸார் தொடர்ந்து விசாரித்தபோது தாங்கள் இலங்கை முல்லைத் தீவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் 25 முதல் 35 வயது வரை இருக்கும். இவர்கள் அனைவரும் கேரள கடற்கரை வழியாக படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. யாரிடமும் விசாவோ, பாஸ்போர்ட்டோ இல்லை. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு படகு ஏற்பாடு செய்து வைத்திருந்த புரோக்கரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக இந்த ஈழத் தமிழர்கள் கொல்லத்தில் தங்கியுள்ளனர். பிடிபட்டவர்களில் ஒருவரான சிவசுப்ரமணியன் என்பவர், கடந்த ஆண்டு தனது மனைவியின் சிகிச்சைக்காக முல்லைத் தீவிலிருந்து தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 11 மணியளவில் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் விடுதலைப் புலிகளா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சமீப காலமாக இலங்கையிலிருந்து பெருமளவிலானோர் வெளியேறி படகுகள் மூலம் உயிரைத் துச்சமாக மதித்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இவர்களை அந்தந்த நாடுகள் கைது செய்தும் வருகின்றனர். அப்படித்தான் இந்த ஈழத் தமிழர்களும் புகலிடம் தேடி இந்தியா வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்திருக்கலாம் என்று தெரிகிறது.

இருப்பினும் கேரள உளவுப் பிரிவு போலீஸார் தொடர்ந்து இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகதிகளை தமிழக அரசு ஏற்க வேண்டும்-சீமான்:

இந் நிலையில் கேரளாவில் சிக்கியுள்ள 30 ஈழ அகதிகளையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போர் முடிந்து ஒரு வருடம் நிறைவடையும் சூழலில் இன்னமும் முள் வேலி முகாம்களுக்குள் ஒரு லட்சம் மக்களை அடைத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது.

முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் மக்களைக் கூட பேரினவாத இலங்கை அரசு எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத வனாந்தரங்களிலும் வெட்ட வெளி பொட்டல் காடுகளிலும் கொண்டு கொட்டுவதாகத் தெரிகிறது.

உடுத்த உடையோ, உணவோ குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளோ இல்லாமல் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கைக்குள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்களின் பாரம்பரீய வாழ்விடங்களை எல்லாம் ஆக்ரமித்து விட்ட சிங்களர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் பேரினவாத சிங்கள இராணுவம் தமிழ் மக்களை அவர்களின் வீடுகளில் குடியேற விடாமல் தடுத்து வருகிறது.

அவர்களின் விவாசய நிலங்கள் எல்லாம் சிங்களர்களால் ஆக்ரமிக்கப்பட்ட நிலையில் கொட்டப்பட்ட இடங்களில் இருந்து அவர்கள் கொத்துக் கொத்தாக உயிர் தப்ப ஓடுகிறார்கள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இப்படி ஓடுகிற ஈழ மக்கள் மலேஷியாவில், ஆஸ்திரேலியாவில், இந்தோனேஷியாவில் என சிறைபடுகிறார்கள். சித்திரவதைக்குள்ளாகிறார்கள்.

ஈழ மக்களின் நிராதரவான இந்நிலை ஆழ்ந்த துக்கத்தையும் கவலையையும் கண்ணீரையும் ஏற்படுத்தும் நிலையில் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல கேரளத்தில் நேற்று முப்பத்துக்கும் மேற்பட்ட ஈழ மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது.

அவர்களிடம் முறையான் பாஸ்போர்ட்டோ, வீசாவோ இருக்கிறதா? என விசாரித்த கேரள போலீசார் வழக்கம் போல அவர்கள் விடுதலைப் புலிகளா? என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்களாம். நிராதரவான முறையில் உயிர் தப்பி ஓடும் ஈழ மக்களிடம் எப்படி பாஸ்போர்ட்டும், வீசாவும் இருக்கும்.

நிற்கவோ, படுத்துறங்கவோ, உறவுகளோடு வாழவோ முடியாத நிலையில் ஓடும் ஈழ அகதிகளின் துன்ப வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஈழ அதிகளை பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.

எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைத்து விடும் மனித நேயமற்ற செயலைச் செய்து விடக் கூடாது என்பதோடு, அபாயகரமான சூழலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் ஈழ மக்களின் துன்பங்களை தமிழக அரசு புரிந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் சீமான்.

http://thatstamil.on...lam-tamils.html

0 comments: