Saturday, May 15, 2010

சீனா விரிக்கும் 'முத்து மாலை வியூகம்' இந்தியாவை உடைக்குமா?

0 comments

'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி
இந்து சமுத்திரம் இந்தியர்களுக்கு மட்டும் சொந்தமானது என்ற நிலையினை இனிமேலும் ஏற்றுகொள்ள முடியாது என்ற பலமான கருத்துடன் சீன வெளியுறவு கொள்கை சிந்தனையாளர்களும் மிக முக்கியமான பாதுகாப்பு ஆலோசகர்களும் காலாகாலம் தொடர்ச்சியான பரிந்துரைகள் செய்து வந்தனர்.

இதன் பேரில் சீன அரச இயந்திரம் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தனது பொருளாதார இராணுவ இராஜதந்திர செல்வாக்குகளை பயன்படுத்தி பல இராணுவ மற்றும் வர்த்தக விநியோகத் தளங்களை நிர்மாணித்து வருகிறது.

சீனாவின் கடல்வழி வழங்கல் பாதையை பொறுத்தவரையில் மேற்கத்தேய நாடுகளைப்போல பயங்கரவாதமோ அல்லது கடற்கொள்ளையரோ நடைமுறைப் பிரச்சனை அல்ல.

ஆனால் இந்த வழங்கல் பாதையூடே இருக்கக்கூடிய தேசங்கள் தடைக்கற்களாக இருந்து சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு விளைவிப்பதாக அமைந்துவிட கூடாது என்பதை கருத்தில்கொண்டே தாம் இத்தகைய நிலைகளை அமைத்து வருவதாக சீன அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

அதேவேளை இந்திய மற்றும் மேலைத்தேய சார்பு ஆய்வாளர்களின் கருத்துபடி தற்போது பொருளாதார நலன்களை முன்வைத்து அமைக்கப்படும் இத்தளங்கள் பிற்காலத்தில் சீனா நன்கு வளர்ச்சி பெற்று விட்ட நிலையில் கடற்படை மற்றும் இராணுவ தளங்களாக மாற்றி அமைக்கப்படலாம் என்கின்றனர்.

சீன அரசு அமைக்கும் இத்தளங்கள் இந்தியாவுக்கும் அதன் பாதுகாப்பு நலன்களுக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் இந்த தளங்களில் ஏற்கனவே நீண்டதூர சமிக்ஞைகளை பரிமாறக்கூடிய தொழில்நுட்ப வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இலகுவாக மேலைத்தேய மற்றும் ஜப்பானிய கப்பல் போக்குவரத்தை கண்காணிக்க கூடிய மையங்களாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவே மேற்கத்தைய புலனாய்வு நிறுவனங்களின் அறிக்கைகள் கூறுகின்றன.

சீனா உலகெங்கும் தனது வர்த்தக நடவடிக்கையை மிக வேகமாக வளர்ச்சி அடைய செய்து வருகிறது. இதில் தெற்கு தென்கிழக்காசிய பகுதி சீனாவின் முழுக்கவனத்திற்கும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதிலும் தெற்காசியாவில் தனது நேரடி வர்த்தகப் போடடியாளரான இந்தியாவை குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதில் ஒன்றுதான் 'முத்து மாலை வியூகம்' [string of pearls strategy]. இந்த வியூகத்தின் அடிப்படையில் தெற்காசியாவில் உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடாது பல்வேறு பொருளாதார வேலைதிட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சீனா கூறிவருகிறது.
 
இந்தியாவை சுற்றி எவ்வாறு சீன தனது 'முத்து மாலை வியூகத்தை' அமைத்து வருகிறது என்பதை வரைபடம் காட்டுகிறது.

முத்து மாலை வியூகம் பற்றிய குறிப்புகள்:
  • தென் சீன கடலிலே இருக்ககூடிய முதலாவது புள்ளி கைனான் எனப்படும் தீவாகும் இந்த தீவின் தெற்கு நுனிப்பாகத்திலே தான் சன்யா எனப்படும் இந்துசமுத்திரத்தை கண்காணிக்கும் பிரதானமான தளம் உள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்படை வசதிகளுடன் கூடிய இத்தளம் இந்தியாவினுடய இந்துசமுத்திரம் மீதான சுதந்திரத்திற்கு பாதகமாய் இருப்பதாக இந்திய சார்பாளர்கள் கூறி வருகின்றனர்.
  • கைனான் பகுதியிலிருந்து வியற்நாமையும் சிங்கப்பூரையும் தாண்டி 1200 கடல் மைல் தொலைவில் இருக்கிறது மலாக்கா நீரிணை இதுவே கிழக்கு நாடுகளிலிருந்து இந்து சமுத்திரத்தினுள் செல்லும் கடல் வழி கலன்கள் ஒவ்வொன்றுககும் மலாக்கா நீரிணையே முதல் வாயில் ஆகும். ஆதலால் சன்யா தளத்தின் இறுக்கமான கண்காணிப்பின்கீழ் அப்பகுதி உள்ளது.
  • ஸ்த்மஸ் கரா பகுதியில் தாய்லாந்து நாட்டின் கால்வாய் அமைக்கும் திட்டம் சீன அரசால் மேற்கொள்ளபட்டு வருகிறது. இங்கு இலத்திரனியல் சமிக்ஞை கருவிகள் பயன்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பாக இவை கடல்வழி கண்காணிப்பு சம்பந்தபட்டவையாகவே தென்படுவதாகவும் மேலைத்தேய மற்றும் இந்திய உளவு நிறுவனங்கள் கூறுகின்றன.
  • மியான்மர்ருக்கு செந்தமான கோக்கோ தீவுகளும் சீன அரசின் கட்டுமான பணிகளுக்குள் உடபட்டு இருப்பதால் ஸ்த்மஸ் பகுதி போல சந்தேகக்கண்கொண்டே பார்க்கப்படுகிறது.
  • சிட்டகொங் எனப்படும் வங்காள தேசத்தின் துறைமுகப்பகுதியில் சீனா ஒரு கப்பல்கொள்கலன் இறங்குதுறையை அமைத்து வருகிறது.
  • இப்போது எல்லோராலும் பரவலாக பேசப்பட்டு வரும் அம்பாந்தோட்டையும் கூட சீன கொள்கலன் இறங்குதுறையாகவும் எண்ணை சுத்திகரிப்பு நிலையாகவும் ஆரம்பத்தில் பயன்பாட்டுக்கு வரக்கூடிய இவ்விடம் பிற்காலத்தில் இந்தியாவுக்கு அபாயம்தரக்கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
  • மாலைதீவின் ஒரு பகுதியான மறாஓ தீவும் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்ககூடிய சீன நடமாட்டமும் டெல்லியை கவலைக்குள்ளாக்கி உள்ளது.
  • இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானின் தென்மேற்கு கரையிலே குவாடார் என்னும் இடத்திலே ச|Pன உதவியுடன் ஓர் ஆழ்கடல் இறங்குதுறை கட்டிஅமைக்கப்பட்டு வருவது இந்தியாவை மட்டுமல்ல அமெரிக்கா இஸ்ரேல் போன்ற இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நாட்டம் கொண்டுள்ள நாடுகளுக்கும் மிகக் கவலை அளிப்பதாக இருக்கிறது. ஏனெனில் இப்பகுதி ஈரான் எல்லையிலிருந்து 70 கிலேமீட்டர் தொலைவில் மட்டுமே அமைந்திருப்பதாகும். பிற்காலத்தில் இதுவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையாக மாற பெரும்வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.
     
  • மேலும் உலகின் பிரதான எண்ணை வள கடல் வழிப்பாதையான கோர்மூஸ் நீரிணையிலிருந்து 400 கிலோமீட்டர் கிழக்கில் குவாடார் இருப்பதால் சீனாவுக்கு கோர்மூஸ் பகுதி மற்றும் அரபிக்கடல் பகுதியில் நடமாடும் அமெரிக்க கடற்படை கப்பல்களை இலகுவாக கண்காணிக்ககூடிய வசதிகளை அமைத்து வருகிறது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தொடர்ச்சியான சொந்த கப்பற்போக்குவரத்து துறைமுக வசதிகளுடன் கூடிய நிலைமையானது சீன பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரும் தாங்கு தளங்களாக இருக்க உள்ளன.

தங்கு தடையற்ற மூலப்பொருள் வழங்கல் இந்த தளங்கள்மூலம் பல பத்தாண்டுகளுக்கு உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

சீனாவின் கச்சிதமாக திட்டமிடப்பட்ட பல்வேறு துறைகளிலுமான இத்தகைய அதிவேக வளர்ச்சி ஜப்பானிய, இந்திய, அமெரிக்க நாடுகளுக்கு பலத்த எச்சரிக்கை அளிப்பதாக இருக்கிறது.

இந்த வளர்ச்சிப்போக்கு மிக விரைவில் உலகின் பொருளாதாரத்தின் கணிசமான பகுதியை தன்னகத்தே உள்வாங்கும் நிலையை சீனா எட்டிவிடும என்று அந்த நாடுகள் எண்ணுகின்றன..

அத்தகையதொரு நிலையில்தான் இந்தியா போன்ற ஜனநாயக பண்புகளுடன் கூடிய, உள்நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கொண்டுள்ள, உலகின்பொருளாதார வளர்ச்சிப் போக்கிற்கேற்ப வளர்ந்து வரும் நாடுகளில் உடைவு ஏற்படும் நிலை உருவாகும் என உலகின் பல்வேறு இராஜதந்திர சிந்தனையாளர்களும் கருதுகின்றனர்.

இன்றைய உலக ஒழுங்கில் பொருளாதார நலன்களே இராணுவ மற்றும் மனிதஉரிமை விவகாரங்களிலும் பார்க்க முன்நிறுத்தப்படுகின்றன.

இந்த நடைமுறைக்கேற்ப தெற்காசியாவில் இந்தியாவை சுற்றி உள்ள ஏறத்தாழ எல்லா அயல் நாடுகளையும் நெருங்கிய இராஜதந்திர பொருளாதார உறவுகளின் ஊடாக சீனா தன்னகத்தே ஈர்த்து வைத்திருக்கிறது.

கடந்த ஐந்து வருடங்களாக தெற்காசிய ஒத்துழைப்பு மகாநாடுகளில் [சார்க்] பார்வையாளர் நிலையில் இருந்த சீனா இந்த ஆண்டு நேபாளம், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் உறுப்பினராக இணைய முற்பட்ட நிலை இந்தியாவை தன்னகத்தே உள்வாங்கிவிட எத்தனிப்பதை காட்டுவதாக சுட்டிகாட்டப்படுகிறது.

எப்படி இருப்பினும் இந்திய மாநிலங்களுக்கும் டெல்லிக்கும் அதிகார இழுபறிகளும், டெல்லி அதிகாரபீடத்தின் தன்னலப்போக்கு நிலைகைளும் தற்போது கவனத்தில் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவை சுற்றி உள்ள நாடுகள் சீன ஒத்துழைப்புடன் அமைதியான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வரும் இடத்து இந்திய மாநிலங்கள் டெல்லி கட்டுபாடுகளுக்கப்பால் சிந்திக்க ஆரம்பிப்பதோ, அல்லது தமது வெளியுறவு கொள்கை பற்றி சிந்திப்பதோ இந்தியா உடைய ஆரம்பித்து விட்டதாகவே கருதப்படும்.

இந்தியாவின் வடபகுதியில் சீன நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து வரும் கடடுரைகளில் பார்ப்போம்.

இலண்டனில் வசித்துவரும்  லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் ஆய்வு மாணவராவர்.  கட்டுரை பற்றியதான கருத்து  எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk

0 comments: